சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க தயாராகுது'புதிய படை!' dinamalar.com
சென்னை :விரைவில் நடக்கவுள்ள, தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க, 'புதிய படை' தயாராகிறது. நேற்று வெளியான, இறுதி வாக்காளர் பட்டியலில், 44 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில், 3.08 கோடி ஆண்கள்; 3.18 கோடி பெண்கள் என, மொத்தம், 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த தேர்தலை விட, 7.68 சதவீதம், வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், 2020 நவம்பர், 16ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, திருத்தப் பணி துவக்கப்பட்டது. டிச., 15 வரை, பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.பெயர் சேர்க்க கோரி, 21.82 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில், 21.39 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, பெயர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. பெயர் நீக்கக் கோரி வந்த, 5.09 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, இடப்பெயர்ச்சி, இறப்பு, இரட்டைப் பதிவு போன்ற காரணங்களுக்காக, பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. திருத்தம் கோரி, 3.32 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவற்றில், 3.09 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. ஒரே சட்டசபை தொகுதிக்குள், முகவரி மாற்றக்கோரி, 1.84 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.