கருணாநிதி போலவே நான் முதல்வரானேன்: பழனிசாமி பேச்சு dinamalar.com
''கருணாநிதி போலவே, நானும் முதல்வரானேன்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார். தமிழகம் முழுதும் பிரசாரம் செய்து வரும் முதல்வர் இ.பி.எஸ்., நேற்று காலை, காஞ்சிபுரம் மாவட்டம் சென்றார். ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜரை தரிசித்த பின், மணிக்கூண்டு அருகே பிரசாரத்தை துவக்கினார். பின், வாலாஜாபாத், காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை, தேரடி உள்ளிட்ட பல பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: நான் நேரடியாக, மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என, ஸ்டாலின் பேசுகிறார். அண்ணாத்துரை மறைந்த பின், கருணாநிதி சூழ்ச்சி செய்து முதல்வரானார்; அவர் நேரடியாக முதல்வராகவில்லை.
மக்கள் அண்ணாதுரைக்கு தான் ஓட்டளித்தனர். அதுபோலவே, நானும் முதல்வரானேன். வரும், 27ம் தேதிக்கு பின், பழனிசாமி ஆட்சியில் நீடிப்பாரா என, ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்; நீடிப்பேன். உழைப்பால் வளர்ந்தவன் நான். நான்கு ஆண்டு ஆட்சி நிறைவு பெறுகிறது.
அ.தி.மு.க.,வை, ஸ்டாலின் போன்ற பலர் வந்தாலும் உடைக்க முடியாது. தமிழகத்தில், அ.தி.மு.க., அரசு, 30 ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்து, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதுவரை, 55 லட்சம் மாணவ, மாணவியருக்கு, 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மடிக்கணினிகளை இந்த ஆட்சி வழங்கியுள்ளது.
Report Story